தஞ்சாவூர், மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

முன்பெல்லாம் முன்பதிவு செய்வதற்கு பயணிகள் நேரில் இரயில் நிலையத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்று வந்தனர். நாளடையில் ஆன்லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். இருப்பினும் படிக்காத பாமர மக்கள், முதியவர்கள் போன்றவர்கள் இரயில் நிலையங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்து அதற்கான தொகையை செலுத்தினர்.

ஆனால் தற்போது தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு டிஜிட்டல் மூலம் மட்டுமே பணம் பெறப்படுகிறது. நேரடியாக தொகை பெறப்படுவது இல்லை. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ஜிபே, போன்பே, பேடி.எம். போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

அது தொடர்பான அறிவிப்பும் முன்பதிவு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதனால் இளைஞர், படித்தவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய வருபர்கள் ஜிபே, போன்பே, பேடிஎம் மூலமும் ஏ.டி.எம். கார்டு மூலம்  பணம் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து செல்கிறார்கள்.

ஆனால் கிராமங்கள் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பேரிடம் ஆன்ராய்டு போன் கூட கிடையாது. பட்டன் செல்போன் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பல பயணிகள் டிக்கெட் எடுக்க வந்து ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். மேலும் அவர்கள் முன்பதிவு டிக்கெட்டுக்கான பணத்தை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விட்டு பணத்தை கொடுக்கிறார்கள்.

ஆனால் பணத்தை நேரடியாக பெறாமல், டிஜிட்டல் பணப்பரிர்த்தனை மட்டுமே அனுமதிப்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். அதனால் சிலர் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று தங்களது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வந்து பிறகு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு செல்கிறார்கள்.

ஆனால் கார்டு இல்லாதவர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு பணமாக பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் பெரும்பலான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கார்டு, ஜிபே, போன் பே பயன்படுத்துவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் முன்பதிவு செய்வதில்லைஃ அவர்கள் ஆன்லைன் மூலமே டிக்கெட் செய்து முன்பதிவு செய்து விடுகிறார்கள். முதியவர்கள் – படிக்காதவர்கள் தான் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் முன்பதிவு செய்து வருவதாகவும், எனவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஒரு புறம் இருந்தாலும், முதியவர்கள் – படிக்காத பாமர மக்கள் வசதிக்காக பழைய முறைப்படி பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் வழங்கும் திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜிபே, போன் பே, கார்டு பயன்படுத்தும் பயணிகள் கூறுகையில், முன்பெல்லாம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கூட்டத்தில் சில்லரை தட்டுப்பாடால் நேரம் அதிகமாகும். தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவதால் சில்லறை, காலதாமதம் போன்ற பிரச்சினைகள் இல்லை என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமல்படுத்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. கார்டு,  ஜிபே, போன்பே இல்லாதவர்களிடம் பணமாகவும் பெற்றுக் கொள்கிறோம். அவர்களை திருப்பி அனுப்புவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீவக்குமார் செயலாளர். இரயில் பயணிப்போர் சங்கம். கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் ரவி கள்ளபெரம்பூர் இளைஞர்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here