புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அவர் மீது புதிதாக கருப்பு பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கவுதம் கெய்தானின் விசாரணைக் காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவரை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, கருப்புப் பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி கவுதம் கெய்தான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 19-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here