திருவாரூர், மே. 26 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பருத்தி விவசாயிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் பொழுது வெயில் தாக்கத்தினை தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் கோடை கனமழையால் சேதமடைந்த கோடை பயிரான பருத்திக்கு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும், சரியான முறையில் வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் அக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த பருத்தி விவசாயி ஒருவர் கடுமையாக அடித்த கோடை வெயிலிலன் தாக்கத்தின் பாதிப்பால் திடீரென அக்கூட்டத்தில் மயங்கி விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று முதல் உதவி செய்தார்கள். இச்சம்பவத்தால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் இக்கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தமிழக விவசாயிகள் நலசங்க மாவட்ட தலைவர் சேதுராமன் தலைமையிலும், டெல்டா விவசாயிகள் குழுமம் பொதுச் செயலாளர் சத்யநாராயணன் செயலாளர் அழகர்ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
மேலும், செம்மை ராமமூர்த்தி தமிழக விவசாய நல சங்க செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இதில் 100 – க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
























