கும்மிடிப்பூண்டி, செப். 11 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சித்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் க.ஏ. ரமேஷ் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் ஐந்து கட்டளைகளை ஏற்று அதனை செயல்படுத்தும் வகையில் அனைத்து கிளைகளிலும் கொடி ஏற்றி வைத்து தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தின் வாயிலாக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறுவது என்றும், கிளை, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிக்கு வருகை தரவுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் முருகதாஸ், ரவி, ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.






















