திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமம் கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ் என்கிற 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் புதிதாக கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை உருவாக்கிவுள்ளார். இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவரை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 28-2021-
இன்று காலை ஜூலை 28, தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை காட்டியும் அதன் செயலாக்க முறையை விவரித்தும் காட்டியுள்ளார் மாணவன் மாதவ் அதனை வெகுவாக கேட்டறிந்த முதல்வர் அவரை பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.
மேலும் , மாதவ் தற்போது 9 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவருக்கு கணினி பாடப்பிரிவில் அதிகம் நாட்டம் கொண்டு அது குறித்து கணினி மொழிகளான ஜாவா, பைதான், சி, சி ப்ளஸ் ப்ளஸ் கோட்லின் ஆகியவற்றை படித்து உள்ளார் . இவர் தற்போது ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க மினி சிபியு வை கண்டுப்பிடித்து உள்ளார். இதற்காக அவர் 2 ஆண்டுகளாக கடுமையான முயற்சி மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவுள்ளார்.
இதற்கிடையில் இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக டெரா பைட் இந்தியா சிபியு கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கி இணையதளம் மூலமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இத்தகவல்களை அறிந்த முதல்வர் ஸ்டாலின் அவரை வாழ்த்தி கணினி தொடர்பான அவரது உயர் படிப்புக்கும் ஆராய்ச்சிற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது மாதவ் மற்றும் அவரது பெற்றோர்கள் உடனிருந்தனர் என்றவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.