ஆவடி, ஏப். 09 –
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில், கல்லூரி நிர்வாக உறுப்பினர் சி.வி.ஹரிகிருஷ்ணன் முன்னிலையில், கல்லூரி நிர்வாக இயக்குநர் சு.கு. திருக்குமரன் துவக்கி வைக்க, கல்லூரித் துணை முதல்வர் (கல்வி) முனைவர் உ. இந்துமதி வரவேற்புரை நல்க, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.குமுதினி ஆண்டறிக்கை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.கௌரி சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் முனைவர் கௌரி உரையாற்றுகையில் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கருதுகோள், ஒழுக்கம் முதலியவற்றை தனது வாழ்க்கையில் இடையறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் ,உலகிலுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அலை பேசியின் முக்கியத்துவத்தையும் மாணவிகளுக்கு சிறப்புற எடுத்தியம்பினார்கள்.
அதன் பின்னர் 2017-2020-ஆம் கல்வியாண்டிற்கான மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கம், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்லூரியின் சார்பில் கௌரவ மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பெற்ற உயிர்வேதியியல் துறை சார்ந்த மாணவி வி.கீதாஞ்சலியும், ஒன்பதாமிடம் பெற்ற நுண்ணுயிரியல் துறை மாணவி கே.நந்தினியும் பல தங்க, வெள்ளி பதக்கங்களுடன் பரிசுக் கோப்பையையும் தட்டிச்சென்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரித் துணை முதல்வர் (நிர்வாகம்) முனைவர் சி இராமசாமி நன்றியுரை நல்க, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியினைக் கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியர் வித்யா ஒருங்கிணைத்திருந்தார்.
மேலும் இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.குந்தினி செய்தியாளர்கள் சந்திப்பில் 555 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இளநிலை பட்டப்படிப்போடு மாணவிகள் நிறுத்திக்கொள்ளாமல் பட்ட மேற்படிப்புக்களை தொடர வேண்டும், எனவும், பெண்களுக்கு அரசு சார்பிலும் தற்போது பல்வேறு சலுகைகளை வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச பஸ் முதற்கொண்டு மாதம் ஆயிரம் உதவித்தொகை என தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தந்துக்கொண்டே இருக்கிறது. இதனைச் சரியாக புரிந்தும் பயன்படுத்தியும் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெண்களின் தனித்திறனுக்கு இந்த உலக மேடை ரத்தினக்கம்பளம் விரித்து காத்திருக்கிறது. அதனை முறையாக பயன்படுத்தி நீங்களும் இந்த சமூகத்திற்கும் தங்களால் ஆன ஆற்றலை பயன்படுத்த வேண்டும். பெண்கள் வீட்டுக்கு முடங்கிக் கிடந்த காலமெல்லாம் கடந்து போய்விட்டது இனியும் சிறிய வட்டத்துக்குள் இருந்து விடாமல் உங்களின் அடுத்தடுத்த இலக்குகளின் எல்லைகளை நோக்கி விரிந்து பரந்துக்கிடக்கும் அனைத்துறை செயல்பாடுகளை ஆராய்ந்து உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள் என கல்லூரி முதல்வர் முனைவர் இரா.குமுதினி மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.




















