பெங்களூர்:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்) சதத்தால் 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது.

இதன் மூலம் 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தோல்வி குறித்து கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

ஆஸ்திரேலியா அணி எங்களைவிட அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி. பெரும்பாலான மைதானங்களில் 190 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான்.

ஆனால் இரவு நேரத்தில் பனி பொழிவு அதிகமாக இருக்கும் போதும், மேக்ஸ்வெல் போன்ற வீரர் அதிரடியாக விளையாடும் போதும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நாங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். அவர்கள் நெருக்கடி சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறார்கள். என்பதை பார்க்கிறோம். அடுத்த ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறோம்.

அதில் பல முயற்சிகளை செய்து பார்ப்போம். இது அவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here