ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் பலர் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அச்சூழலால் அவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் மகளிர் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் அப்பாதையை கடக்க முகம் சுளித்தப் படியும் மூக்கினை மூடிக் கொண்டும் அத் துறு நாற்றத்தோடு தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தங்கள் அச்ச உணர்வை வெளிப்படுத்து கின்றனர்.
இப்பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் வாய்மொழி மற்றும் எழுத்துப் பூர்வமான புகார்கள் தெரிவித்தும், இது நாள் வரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இனியாவது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் பொது கழிப்பிடம், மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நகர உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியரகம் ஆகியவற்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.