திருவாரூர், மார்ச். 22 –
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ண நகரை சேர்ந்தவர்கள் மோகன்,சரஸ்வதி தம்பதியர்கள் இந்நிலையில் மோகன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து மோகனின் இறப்புக்கு பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவருடைய குழந்தை மட்டுமே வாரிசாக உள்ளனர். இந்த நிலையில் அவர் ஒரு தனியார் வங்கியில் வாங்கிய கடன் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி மோகன் மனைவி சரஸ்வதிக்கு சரிவர தெரியவில்லை. இந்த நிலையில் அந்த தனியார் வங்கி சார்பில் மோகன் வாங்கிய கடன் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மோகன் மனைவி சரஸ்வதி அதுதொடர்பாக அவ்வங்கியிடம் 2003-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை வங்கிகளின் பண பரிவர்த்தனை பற்றி, உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டு தகவல்கள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த வங்கி சார்பில் முறையாக விண்ணப்பிக்கவில்லை அவர் வங்கி கணக்கில் நாமினி எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் அதனால் வங்கி கணக்கு பட்டியலில் வழங்க முடியாது என்று காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுக்குறித்து கடந்த 2021-ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சரஸ்வதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமிமேனன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.
மேலும் அவ்வழக்கு தொடர்பான தீர்ப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சரஸ்வதி மற்றும் அவருடைய பிள்ளைகளுக்கு தனியார் வங்கி சார்பில் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, இழப்பீடாக ரூ 15000 வழங்க வேண்டும். எனவும், மேலும் சரஸ்வதியின் கணவர் மோகனின் 2003-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை உள்ள கணக்கு விவரங்களை 2 மாதத்திற்குள் அவ்வங்கி வழங்க வேண்டும் எனவும், மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.



















