கும்பகோணம், நவ. 17 –
கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இறந்த இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் கொட்டிய மழையில் நனைந்தபடி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் மறைந்த அடுப்பு செந்தில் அவருக்கு, 2 மகன்கள் யோகேஸ்வரன் (21), மற்றும் லோகேஸ்வரன் (21) இரட்டையர்கள். இருவரும் பிகாம் பட்டதாரிகள். இந்நிலையில் நேற்று இரவு யோகேஸ்வரன், தனது நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவரின் மகன் நந்தகுமார்(22). இருவரும் பெரிய கடைத்தெருவில் உள்ள ஒரு எலக்ரானிக் சர்வீஸ் செண்டரில் தங்களது லேப்டாப்பை சர்வீஸ் செய்வதற்காக கொடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பெரியதம்பி நகர் அருகே வந்தபோது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து அந்த கும்பல் கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக யோகேஸ்வரன் போராடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று யோகேஸ்வரனை 8 இடங்களில் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயற்சித்த நந்தகுமாரும் வெட்டுப் பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். யோகேஸ்வரனுக்கு ரத்த கசிவு அதிகமாக இருந்ததால் அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு யோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகுமார் வலது கை தோள்பட்டையில் வெட்டு காயம் அடைந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்
தஞ்சாவூரிலிருந்து யோகேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பாணாதுறை திருமஞ்சனவீதி பகுதிக்கு இன்று மதியம் வந்த போது அவரது உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி இளைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கனமழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடியே போராட்டம் நடத்தியவர்களுடன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) மோகன் தாஸ், காவல்துறை ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், சுகந்தி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற ரவுண்டானா அரசு மருத்துவமனை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து யோகேஸ்வரன் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. இது குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் யோகேஸ்வரன் தரப்பினருக்கும், சபரி நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கணேஷ் தரப்பினருக்கும் கல்லுாரியில் படிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாணாதுறை கள்ளர்தெரு பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று காணாமல் போய் உள்ளது. அதனை ரமேஷ் தரப்பினர் தான் திருடிச் சென்றதாக கூறியதால் மோதல் முற்றியது. இந்நிலையில் ரமேஷ் தரப்பினரின் இருசக்கர வாகனம் ஒன்றை எடுத்து வந்து யோகேஸ்வரன் தரப்பினர் அடித்து உடைத்தால் இரு தரப்பினரிடையே கடந்த 6 மாத காலமாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. ரமேஷ் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அவர் கடந்த வாரம் தான் கும்பகோணம் வந்ததும், தற்போது முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்தது. யோகேஸ்வரனை கொலை செய்தவர்கள் யார் யார் என்பது குறித்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்புடைய நபர்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் காவல்துறையினர் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.