திருவாரூர், ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு. பிற்பகலில் திருவாரூருக்கு முதலமைச்சர் வருகைப் புரிந்தார்.
அவருக்கு திமுக மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தலைமையில் திருவாரூர் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மாலை 6.30 மணியளவில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி மிக எளிமையாக குறைந்த அளவு கட்சியினரோடு, காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின், கலைஞர் கோட்டத்திற்கு வருகைப் புரிந்து கலைஞரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பின் கோட்டத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
தொடர்ந்து கோட்டத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் நடைபயணமாக கலைஞர் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு முதல்வரைக் காண வந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அவரோடு அப்பகுதி வாழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் உடன் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து காட்டூரில் அமைந்துள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகதம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நாளை ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மகளின் திருமணம் விழாவில் பங்கேற்கிறார். திருமணத்திற்கு பின்னர் திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.



















