சென்னை:

பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் இணைய தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதேபோன்று இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே இணைய தளம் மூலம் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்யும் மென் பொருளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்திருக்கிறேன்.
இதன்மூலம் மாநிலத்தில் எந்த பகுதியில் வசிக்கு மக்களும் பிறப்பு-இறப்பு சான்றிதழை எந்த ஒரு இ-சேவை மையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் இருந்தோ, அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றோ பதிவிறக்கம் செய்யலாம். இதன்மூலம் எந்த சிரமமும் இன்றி பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பிறந்தாலோ, அல்லது குழந்தை பிறந்ததை பதிவு செய்தாலோ 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை பெறலாம். கர்ப்பிணி பெண்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும்.

அதில் அவர்களுடைய வீட்டு விலாசம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றுக் கொண்டாலும் இந்த பதிவு எண் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து குழந்தை பிறப்பு சான்றிதழை பெறலாம்.

தமிழகத்தில் தற்போது 99.5 சதவீத குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தான் பிறக்கின்றன. 23 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் இறக்கிறார்கள். இதற்கான பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை அந்தந்த ஆஸ்பத்திரி மூலம் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் முறைப்படி பதிவு செய்து இந்த சான்றிதழ்களை எந்த செலவும் இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here