சென்னை, செப் . 25 –
சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் இறையன்பு வந்திருந்தார். அப்போது அவரது காரை கிராம மக்கள் வழிமறித்தனர். உடனே காரை விட்டு இறங்கியதும் இறையன்புவின் காலில் விழ ஒரு பெண் முற்பட்டார்.
உடனே அவரை தடுத்து நிறுத்திய இறையன்பு அப்பெண்ணிடம் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டு பூண்டி ஏரியை ஆய்வு செய்யும் பணிக்கு திரும்பினார்.
பின்னர் அவர் ஆய்வு முடித்துவிட்டு அவர் திரும்பி வரும் வரை அப்பகுதியில் மக்கள் திரும்பவும் காத்திருந்தனர். அவர்களை பார்த்து மீண்டும் காரை நிறுத்தி “நிச்சயம் உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெரும் வைரலானது. பொதுவாக மாவட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், எம்எல்ஏ, அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரை வழிமறித்து கோரிக்கை கடிதத்தை மக்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒரு தலைமை செயலாளரின் காரை வழி மறித்து கோரிக்கை மனு கொடுத்த சம்பவம் அரசு அலுவலர்கள் அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.