சென்னை மார்ச். 03 –
சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் கூட்ட அரங்கில் நேற்று 02.3.2022 ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை (கட்டடம்) மையம் நடத்தும், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில் நுட்ப பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்கள்.
அமைச்சர் உரையாற்றிய போது, முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அரசுத் துறைகளின் கட்டுமான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அரசுத் துறையில் மட்டுமல்லாமல் தனியார் துறையிலும் பொதுமக்கள் பல்வேறு கட்டடங்களை கட்டுகின்றனர்.
மேலும், கட்டப்படும் கட்டடங்கள் யாவும் மிகவும் நேர்த்தியுடனும், கலை நயத்துடனும், தரத்துடனும் கட்டப்பட வேண்டும்.
கட்டுமான பணிகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை உக்திகளை தேர்வு செய்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் நாம் தனிக்கவனம் செலுத்துதல் வேண்டும்.
புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்துதல் குறித்து பொறியாளர்களுக்குரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.
இந்த பயிற்சி பெறுவதற்கு வருகை புரிந்துள்ள பொறியாளர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை உக்திகளை பயன்படுத்துவதன் மூலம், நாம் உருவாக்கும் கட்டுமானங்கள் தரத்துடன், நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் கட்டட கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இப்பயிற்சி வகுப்பில்;
கட்டுமானங்களின் உறுதித்தன்மை மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள்.
தரக்கட்டுப்பாட்டு மேலாண்மைக்கான உக்திகள்.
கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் ப்ரிகாஸ்ட் கான்கீரிட் (Precast Concrete) முறைகள்.
கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
எனவே, பொறியாளர்களின் முழு ஈடுபாடு மூலம்தான் பொதுப்பணித்துறையின் கட்டுமானங்கள், தரத்துடன் குறித்த காலத்தில் நிறைவேற்ற முடியும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு கவனக்குறைவும் மிகப்பெரிய பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை கூட ஏற்படுத்தக்கூடும்.
கட்டுமானங்களின் வலிமைக்கும், நீடித்த ஆயுளுக்கும் தரமான அஸ்திவாரம் இன்றியமையாதது ஆகும். எனவே, அஸ்திவாரம் அமைக்கும் போது பொறியாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். Foundation போடுவதற்கு முன்பு கட்டடங்கள் என்ன உபயோகத்திற்காக கட்டப்படவுள்ளது என்று தெரிய வேண்டும். உதாரணமாக,
வசிப்பதற்காகவா, பள்ளிகளுக்காகவா, மருத்துவமனைக்காகவா, அலுவலகத்திற்காகவா, தொழிற்சாலைகளுக்காகவா போன்ற காரணிகளை Foundation போடுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கட்டங்களின் மீது சுமத்தப்படும் லோடுகள், கட்டடங்களின் கீழே உள்ள மண்ணின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் Structural Drawing உருவாக்கப்படுகிறது. அதை களப்பொறியாளர்கள் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் Structural Drawing இல் உள்ளபடியே பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கட்டுமானப் பணியில் CURING மிகவும் முக்கியமானது. எனவே, கட்டுமானப் பணிகளில் முக்கியமானதாக கருதப்படும், கான்கீரிட் அமைத்தல் மற்றும் பூச்சு பணிகள் முடிந்தபின்பு, முறையாக CURING மேற்கொள்ளும் போது, கட்டடம் நீடித்த உறுதித் தன்மை பெறும்.
எனவே, பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மிகவும் நேர்த்தியுடனும், கலை நயத்துடனும், தரத்துடனும் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எல்.ரவிச்சந்திரன், கோவை மண்டல தலைமைப் பொறியாளர் ஆர்.இளஞ்செழியன், தலைமை கட்டடக் கலைஞர் எஸ்.மைக்கேல், திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.வாசுதேவன் மற்றும் அனைத்து பொறியாளர்களும் பங்கேற்றனர்.