காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதன் தற்போதைய பரம்பரை அறங்காவலரான பாலாஜி என்பவர் அக்கோயில்களை நிர்வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து அத்திருக் கோயில்களின் நிர்வாக குளறுபடிகள் மற்றும் கோயில் சொத்துக்களில் தவறான மேலாண்மை, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார்களாக வந்துள்ளது. மேலும் அப்புகார்களின் பேரில் காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, பரம்பரை அறங்காவலர் பாலாஜியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதனைத் தொடர்ந்து தனியார் நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்த அவ்விருத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவ்விருக் கோயில்களின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள தற்காலிகமாக காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் தியாகராஜனை தக்காராக நியமித்து நிர்வாக பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.
அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் அதிகாரிகள் இரு கோயில்களையும் தனியாரிடமிருந்து இந்தி அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தனியாரின் நிர்வாகத்தில் இருந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள செய்திக் கேட்டு அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.