திருவண்ணாமலை, செப்.17 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமான நம்பியிருக்கிறது. பருவ மழை கைவிடும் காலங்களில் சாகுபடி சரிந்து விவசாயிகள் துயரப்படுகின்றனர். மேலும் வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறை பாதிப்பும் ஏற்படுகிறது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான மெகாதிட்டம் தீட்டப்பட்டது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 541 கிராம ஊராட்சிகளில் 1121 பண்ணை குளங்களை அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க மனித உடல் உழைப்பின் மூலம் 30 நாட்களில் இந்த பண்ணை குளங்களை உருவாக்கி உலக சாதனையில் இடம்பெறும் பணிகள் தீவிரமாக நடந்தன.
அதன்படி ஒரு பண்ணை குளம் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியிலிருந்து தலா ரூ.1.78 லட்சம் தினக்கூலியாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு பண்ணை குளமும் 72 அடி நீளம் 36 அடி அகலம் 5 அடி ஆழம் என்ற அளவில் அமைக்கப்பட்டன. பண்ணை குளம் அமைக்கும் பணியை ஆட்சியர் பா.முருகேஷ் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தினமும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதோடு ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தனித்தனி குழு அமைத்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. எனவே திட்டமிட்டபடி 30 நாட்களில் 1121 பண்ணை குளங்கள் அமைத்து முடிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளிடம் பண்ணை குட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. அதில் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் மீன் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 30 நாட்களில் 1121 பண்ணை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளதை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி எலைட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்கார்டு அகாடமி, இந்தியா ரெக்கார்டு அகாடமி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவன அதிகாரிகள் கடந்த 3 நாட்கள் ஆய்வு செய்தனர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை உருவாக்கி உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழினை ஆட்சியர் பா.முருகேஷ் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப ஆகியோரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் எஸ்.பி.பவன்குமார் ரெட்டி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, ஊதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமி நரசிம்மன், ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சிவக்குமார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் தி.அண்ணாதுரை மற்றும் உலக சாதனையை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை காலத்தில் 4.69 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பண்ணை குளங்களை உருவாக்கி உலக சாதனை நிகழ்த்தியதற்காக வழங்கப்பட்ட அங்கீகார சான்றை தமிழக பொதுப்பணித்றை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் காண்பித்து ஆட்சியர் பா.முருகேஷ் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.