ராமநாதபுரம், செப். 9- தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பின்தான் 10 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கு ஏற்ப காங்கிரஸ் அருமையை தற்போது பாஜவின் ஆட்சி மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது, என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் திடலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்து பொய் வழக்கு போட்ட மத்திய அரசை கண்டித்து  கண்டன விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசும் போது, பாஜ. ஆட்சியில் தற்போது பிரதமர் சென்ற இடமெல்லாம் தோல்விதான். அவர் அமேசான் சென்றார் அங்கு காடு தீ பிடித்து எரிகிறது. இந்தியாவில் நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் தோல்வியடைந்து விஞ்ஞானிகள் புலம்புகின்றனர். ஜி.எஸ்,டி வரியால் பண மதிப்பு இழந்து நாடு முழுவதும் மக்கள் அல்லல் படப் போகின்றனர். பொருளாதாரம் சீரழிய போகிறது என அன்றே முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். நாம் அன்று அதை பெரிதாக பார்க்காமல் சிரித்தோம். ஆனால், சிதம்பரம் கூறியது இன்று நடந்துள்ளது. சிதம்பரத்தை பிரதமர் மோடி கைது செய்ததை நாம் பாராட்டியே தீர வேண்டும். காரணம் இன்று பட்டி தொட்டியில் உள்ள டீ கடை முதல் தெரு தெருவாக எங்கு பார்த்தாலும் சிதம்பரம் கைது ஏன் என்ற பேச்சுதான் விவாதமாக அமைந்துள்ளது. சரி… சிதம்பரம் மேல் புகார் கொடுத்த இந்திரா முகர்ஜி யார் என தெரியுமா? அவர் தன் மகளை கொலை செய்து சிறையில் உள்ள குற்றவாளி. பொதுவாக ஒருவரை கைது செய்து கோர்ட்டிற்கு கொண்டு சென்றபின் போலீசார் அவரை விசாரணைக்கு எடுக்க மனு செய்து 10 நாட்கள் அவகாசம் கேட்பர். கோர்ட் 5 நாட்களோ 6 நாட்களோ வழங்கும் விசாரணை முடிந்து மீண்டும் கோர்ட்டில் ஒப்படைப்பது வழக்கம். இந்த நடைமுறை தான் காலம் காலமாக உள்ளது. ஆனால் சிதம்பரம் வழக்கில் மட்டும் சிபிஐ விசாரித்த பின் கோர்ட்டில் ஒப்படைக் கின்றனர். அப்படி இருந்தும் சிபிஐ விசாரித்த 450க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு டான் டான் என பதில் அளித்துள்ளார் சிதம்பரம். சிதம்பரம் என்ன துரோகம் செய்தார்? பொருளாதாரம் வீழ்ச்சி அடைய போவதை சுட்டிக் காட்டினார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து பொருளாதாரத்தை 9 சதவீத வளர்ச்சியில் வைத்து இருந்தோம். ஆனால் தற்போது இந்த வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல கம்பெனிகள் மூடிவிட்டதால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பலர் திருப்பூர், கோவை என வெளியூர் வேலைக்கு சென்றவர்கள் வேலை இல்லை என சொந்த ஊருக்கு திரும்பி வருமானத்திற்கு வழியின்றி அல்லல் படுகின்றனர். கிராமப் புறங்களில் ஒரு பழமொழி கூறுவது உண்டு. அதாவது நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது. அந்த பழமொழிக்கு ஏற்ப எங்கள் காங்கிரஸ் ஆட்சியின் பெருமை தற்போது பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியதின் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பாஜ வின் திறமையற்ற ஆட்சியை பற்றி மக்கள் தெரிந்து கொண்டனர்.
இவ்வாறு பேசினார். வட்டார தலைவர் முருகன் வரவேற்றார். நகர் தலைவர் முகம்மது காசிம் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here