கும்பகோணம், டிச. 19 –

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் விசிக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் மாநகரத்தின் மேட்டு தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் மகன் மாரிமுத்து 48 வயதான அவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் மாரிமுத்து அப்பகுதியில் முறுக்கு சிப்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாநகர செயலாளர் கலையரசன், தனியார் கேஸ் கம்பெனி மற்றும் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள மாரிமுத்துவிடம், கலையரசன், உச்சி பிள்ளையார் கோவில் அருகில் இரண்டு கடை மற்றும் ஒரு பில்டிங் விற்பனைக்கு உள்ளது என்று தெரிவித்து அவ்விடத்திற்கான போலியான டாக்குமெண்ட் தயாரித்து அதனை மாரிமுத்துவிடம் காட்டி அவ்விடத்தின் விலை மதிப்பு ரூ.41 இலட்சம் எனவும், அதனைத் தொடர்ந்து, அவ்விடத்தை விற்றால் அதிகப்படியான லாபம் கிடைக்கும் எனவும், அதற்கான முதலீடை நீங்கள் செலுத்துங்கள் அதனை விற்றப்பின்பு அதில் கிடைக்கும் லாபத்தில் இருவரும் சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவித்துள்ளார் அதனை நம்பி மாரிமுத்து கலையரசனிடம் அவ்விடத்திற்கு முதல் தவணையாக ரூ.20 இலட்சத்தை முன் தொகையை கொடுத்ததாகவும், மேலும் மீதி தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ. 41 லட்சத்து 85 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

இப் பணப் பரிவர்த்தனை எல்லாம் கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து சிறுக சிறுக மாரிமுத்து கலையரசனிடம் கொடுத்ததாக பணத்தினை பறிக்கொடுத்த மாரிமுத்து தெரிவிக்கிறார்.

இந்நிலையில் மாரிமுத்து விசிக பொறுப்பாளர் கலையரசரிடம், இடத்தை எப்பொழுது விற்பீர்கள் எப்போது எனது பணத்தை தருவீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு விசிக பொறுப்பாளர் கலையரசன், உன் பணத்தை கொடுக்க முடியாது முடிந்தால் வாங்கிக் கொள். இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என்று. கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கலையரசன் மீது மாரிமுத்து குற்றம் சாட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து, மாரிமுத்து கிழக்கு காவல் நிலையத்தில் எனது பணத்தை பெற்றுக் கொடுங்கள் என்று புகார்  அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் கலையரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாரிமுத்து மனைவி கோமதி தெரிவித்த போது நான் என்னுடைய நகையை விற்றும், எனது குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளிடம் கடன் பெற்று பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

எனது பணத்தை திரும்ப கொடுக்க  வில்லையென்றால் நான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை இதனால் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here