பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் இருந்து 2021 அக்டோபர் 14 அன்று தொடங்கி வைக்கப்பட்ட எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணத்தின் முதல் பகுதி ஒன்பதுக்கும் குறைவான நாட்களில் 3,050 கிலோமீட்டர்களை கடந்தது.
2021 அக்டோபர் 24 அன்று தொடங்கிய இரண்டாவது கட்டம் ஜம்முவை எட்டியுள்ளது. தில்லி, பஞ்சாப் ஆகிய சமதளங்களை கடந்து ஹிமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள பனி படர்ந்த மலை பகுதிகளை கடந்து முதல் பகுதி நிறைவுற்றது.
பயணத்தின் நோக்கங்களில் சாகசமும் ஒன்று என்றாலும், தேச ஒற்றுமை, தேச கட்டுமானம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய மற்ற நோக்கங்களையும் இந்த குழு அடைய முடிந்தது.
ஹிமாச்சலிலுள்ள சுந்தர் நகர் மற்றும் மணாலி, லடாக்கில் நியோமா, பாங், ஹான்லே, லே மற்றும் கார்கில் மற்றும் ஸ்ரீநகரில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் இந்த குழு கலந்துரையாடி, நட்புறவை உருவாக்கி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பியது.
ஆர்வமுள்ள உள்ளூர் மக்கள் பயணக் குழுவுடன் கைகோர்த்து மணாலி, லே மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் ‘தூய்மை இந்தியா’ செய்தியை விளம்பரப்படுத்தும் இயக்கத்தை கூட்டாக மேற்கொண்டனர். முன்னாள் எல்லையோர சாலைகள அமைப்பு/ ராணுவ வீரர்கள் மற்றும் வீரதீர விருது வென்றவர்களுடன் உரையாடும் வாய்ப்பை குழு பெற்றது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுந்தர் நகர் மற்றும் லடாக்கில் உள்ள லே ஆகிய இடங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பள்ளி மாணவர்களுடன் குழு உரையாடியதுடன், பள்ளிப் பைகள் மற்றும் எழுதுபொருள்களை விநியோகித்தது. யோசனைகள் மற்றும் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டது. உலகப் புகழ்பெற்ற குல்லு தசரா கொண்டாட்டங்களில் குல்லு மாவட்டத்தின் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பீமா காளி கோவில் மற்றும் திக்ஸே மடாலயத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த குழு ஒரு கலாச்சார இணைப்பை ஏற்படுத்தியது. கார்கில் போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.