பெங்களூரு :
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர், அவர் கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷா, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கர்நாடக பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி, வேட்பாளர்கள் தேர்வு குறித்து கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தேவனஹள்ளியில் நடந்த ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்களின் ஒருங்கிணைக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய குடிமக்கள் பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), கம்யூனிஸ்டு கட்சிகளும், மம்தா, ஆகியோரும் பிறநாடுகளில் இருந்து ஊடுருவி இந்தியாவில் வசிப்பவர்களை விரட்டி அடிக்க விரும்புவது இல்லை. இவ்வாறு ஊடுருவி வருபவர்களை அவர்கள் வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்கு வங்கி அல்ல. அவர்கள் இந்திய நாட்டுக்கான அச்சுறுத்தல்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. அசாமில் மட்டும் 40 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.
காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பாதுகாக்கப்படவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தல் பாஜக கட்சிக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியமானது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கின்றன. இந்த கூட்டணி அந்தந்த கட்சிகளின் கொள்கை, நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த கூட்டணிக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது.
மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தெரியாது. ஒருவேளை, தேவேகவுடாவும் பிரதமராக விரும்பலாம். இதுபோன்ற கூட்டணி ஒருபோதும் இந்தியாவை முன்னேற்றம் அடையவும், பாதுகாக்கவும் செய்யாது. இளைஞர்களின் பொருளாதார வளத்தையும் உயர்த்தாது.
ராகுல்காந்தி விவசாயிகளை தவறான பாதையில் அழைத்து சென்று தனக்குத்தானே பள்ளம் தோண்டி கொள்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய 10 ஆண்டு ஆட்சியில் ஒரு முறை மட்டும் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 3 கோடி விவசாயிகள் மட்டும் பயன் அடைந்தனர். ஆனால், பாஜக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.75 ஆயிரம் கோடிகளை ஒதுக்கி 13 கோடி முதல் 15 கோடி விவசாயிகளுக்கு பயன் கிடைக்க செய்கிறது.
அதன்படி பார்த்தால் பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தால் விவசாயிகளுக்காக ரூ.7.5 லட்சம் கோடியை வழங்கும். இந்த சிறிய கணக்கு கூட ராகுலுக்கு தெரியவில்லை. உருளைக்கிழங்கு பூமிக்கடியில் விளையுமா?, பூமிக்கு மேல் விளையுமா? அல்லது தொழிற்சாலையில் கிடைக்குமா? என்பது ராகுலுக்கு தெரியாது. ஆனால் அவர் உத்தர பிரதேசத்தில் உருளைக்கிழங்கு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசுவதற்கு யார் எழுதி கொடுக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை.
கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி கிளர்க்காக உள்ளார். சித்தராமையா சூப்பர் முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் பாதியளவிலான முதல்-மந்திரியாகவும் இருக்கிறார். இது ஒருபோதும் கர்நாடகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லாது. கர்நாடகத்தை போன்ற ஒரு கூட்டணி ஆட்சி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.