பொன்னேரி, டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – பஞ்செட்டி – திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் குறிப்பாக மீஞ்சூர் அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
அதனைக் கவனத்தில் கொண்ட ஆவடி ஆணையரக போக்குவரத்து துறை சார்பில் ஒரு சில போக்குவரத்து மாறுதல்களை ஏற்படுத்தும் வகையில், வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அச் சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது.
அதன்படி சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அத் தனி வழித்தடத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஆணையர் சங்கர் பொதுமக்களின் வாகனங்கள் எளிதாக பயணிக்கும் வகையில் துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதன் காரணமாக அச்சாலையில் இனி வரும் காலங்களில் கணிசமாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
மேலும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் . சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீதும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆணையர் சங்கர் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் ஆணையர் பேசுகையில் சாலையை சீரமைப்பதற்கும், மின்விளக்கு ஏற்படுத்தி தருமாறு எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது ஆணையர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, காவல்துறை ஆணையர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் மலைச்சாமி, பிராங்க் டி ரூபன், செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் , மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி, அத்திப்பட்டு எம்.டி.ஜி.வடிவேல், வல்லூர் உஷா ஜெயக்குமார், கொண்டகரை ஜெயபிரகாஷ், கணியம்பாக்கம் ஜெகதீசன், உள்ளிட்டவர்களோடு திரளான அப்பகுதி வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டனர்,