கும்பகோணம், ஜூன். 25 –
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரை, முதலை கடித்து, படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக முதலையிடம் இருந்து மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ரவி (வயது 55) மீன்பிடி தொழிலாளி. வழக்கம் போல் கொள்ளிடத்தில் மீன்பிடிப்பதற்காக அங்குள்ள மதகு கட்டையில் உட்கார்ந்து கொண்டு தனது மீன்பிடி வலையின் மூலம் ரவி மீன்பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கொள்ளிட ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்து தண்ணீரில் இழுத்து சென்றதது. அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் ரவியை முதலையிடமிருந்து மீட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ரவியை
108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கியப் பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். தகவலயறிந்த சம்பவத்திற்கு விரைந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இவ்விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






















