திருவாரூர், ஆக. 03 –

ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள் அதிகாலை முதலே காவேரி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வருகைத் தந்து, காவிரி அன்னையை வணங்கி வழிபாடு செய்தனர்.

மேலும், திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில் ஆடிபெருக்கு விழா காலை முதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்த குளமான திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கன்னிப்பெண்கள், புதுமணதம்பதிகள், சுமங்கலி பெண்கள்  கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஆடிமாதம் 18ம் தேதி வரும் ஆடிப்பெருக்கு நாளில்  சுமங்கலிபெண்கள் கழுத்தில் கட்டிக்கொள்ளும் தாலிகயிற்றை மாற்றி புதிதாக மஞ்சள் கயிற்றை அணிந்துகொள்வதும், கன்னிப்பெண்களது கழுத்தில் வயது முதிர்ந்த சுமங்கலிபெண்கள் மஞ்சள் கயிற்றினை கட்டி விரைவில் திருமணம் கைகூட வேண்டியும், சுமங்கலிபெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள்கயிற்றை கழுத்தில்கட்டிக்கொண்டு தாலிபாக்கியம் நிலைத்திட வேண்டியும் இந்த சடங்குகளை மேற்கொண்டனர்.  மேலும் விவசாயம் செழித்தோங்க வேண்டியும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவேண்டியும் நீர்நிலை முன்பு தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், கண்ணாடி, பச்சரிசி, வெள்ளம் மற்றும் கனிவகைகள் உள்ளிட்ட மங்கள பொருட்களை வாழை இலையில் படையலிட்டு காவேரி அன்னையை வழிபட்டு ஆராதனை செய்தனர்.

பஞ்ச பூதங்களில் நீர் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதென்பதால் அது பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு அதன் பயனை காலமெல்லாம் வழங்கி வருகிறது அச்சிறப்பு மிக்க அந் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதற்கு பல்வேறு பூஜைப் பொருட்கள் கொண்டு வணங்கியும், அதற்கு தான்யங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பலகாரங்களை படையல் இட்டும் அதனை வழிப்பாடு செய்து வருவதாக இவ்விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்நன்னாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் பெருகுமென அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here