திருவாரூர், ஆக. 12 –
திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் வசித்து வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களின் குழந்தைகள் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி கச்சனம் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்விப் பயின்று வருகிறார்கள்.
இந்து ஆதியன் வகுப்பைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்படும் பொழுது இந்து ஆதியின் என சேர்க்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை பயில்கிறார்கள். அதன் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு என வந்தவுடன் அவர்களுக்கு உரித்தான சரியான சாதி சான்றிதழ் வாங்கி வர பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்கப்படுவதாக தெரிய வருகிறது.
அதனைத்தொடர்ந்து, அவ்வின மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதியன் பழங்குடி எனும் சாதி சான்றிதழ் வழங்கிடக்கோரி, வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கேட்டாதவும், ஆனால் அவ்வலுவலகத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பான ஜோஹி பிரிவினர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில், அரசு பொதுத்தேர்வுகளை எழுதி வருவதாகவும் மேலும் உயர் கல்விப்போன்ற படிப்புகளை தொடர்வதற்கும் இதே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் பயன்படித்தி வருவதாகவும், தாங்கள் உள்ளபடியே தாழ்த்தபட்ட வகுப்பைச்சார்ந்த பழங்குடியினர் (எஸ்.டி. ) பிரிவைச் சார்ந்தவர்கள் என இந்து ஆதியின் வகுப்பின் மாவட்ட தலைவர் அன்புமணி தெரிவிக்கிறார்.
மேலும், அவர் தெரிவிக்கும் போது, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் தங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பதால் அரசு சலுகைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை எனவும், எங்களுக்கு எங்களுடைய உண்மையான இனமான பிரிவான இந்து ஆதியன் (ST) பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்கி அரசு சலுகைகள் அனைத்தும் கிடத்திடவும், மேலும் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் உயர உரிய வழிவகை செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கின்றார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் வசித்து வரும், இவர்களுடைய நெருங்கிய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இந்து ஆதியன் என சான்றிதழ் கொடுத்து விட்டார்கள் எனவும், ஆனால் ஒரே மாவட்டத்தில் வாழக்கூடிய ஒரே இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, இருவேறு சாதி சான்றிதழ்களை அரசு வழங்கி வருகிறதெனவும், இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தங்களுக்கு இந்து ஆதியன் என்ற சாதிச் சான்றிதழை வழங்கிட மறுக்கும் மன்னார்குடி கோட்டாட்சியர்க்கு அறிவுறுத்திட வேண்டுமென அன்புமணி தெரிவிக்கின்றார்.
மேலும் இப்பிரச்சனைக்கு முடிவு காணும் வகையிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், தங்கள் வீட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை, அப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தப்படியே, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நாங்கள் உண்மையான இந்து ஆதியனா என்பதை ஆராய்ந்து எங்களுக்கு உரிய வகுப்பு சான்றிதழை வழங்கி எங்களுடைய பிள்ளைகள் உயர் கல்வியை நல்ல முறையில் படித்து அரசின் உரிய சலுகைகளை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.























