திருவாரூர், ஆக. 02 –
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
வட்டார சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
மேலும் இதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். மேலும் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தற்கு என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடியக்கமங்கலம் சுகாதார ஆய்வாளர் சேகர் மாணவ மாணவியர்களிடையே விளக்கி உரைநிகழ்த்தினார்.
தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது.? மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..?அதனை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்டவற்றை புள்ளி விவரங்கள் மூலமாக மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் சுகாதார புள்ளியியலாளர் ராஜா எடுத்துரைத்தார். தொடர்ந்து பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் பைகளை வழங்கினார்கள்.
மேலும் அப்பள்ளி வளாகத்தில் மண்ணிற்கேற்ற பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகள் நடும் பணி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி, சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர் சேகர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை வெகுச்சிறப்பாக நடத்தினார்கள்.