திருவண்ணாமலை, ஆக.2–
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையட்டி 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. உண்ணாமலையம்மன் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் காலை 6 மணியளவில் வேத மந்திரங்கள் ஒதி சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொரோனா பரவல் காரணமாக பரணி மற்றும் கிருத்திகையை கருதி நேற்றுமுதல் 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்ணாமலையார் கோவில் கொடியேற்று விழாவிலும் சுவாமி தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் நேற்று காலை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. ஆடிப்பூர பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும் என்பதால் 3 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள்.