காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் சித்ரகுப்தருக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லை எனக்கூறப்படுகிறது, இந்நிலையில் புண்ணிய நகரமும், கோவில் நகரமுமான காஞ்சிபுரம் மாநகர பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்தர் சுவாமி எனும் பெயரில் தனி கோவில் கொண்டு அங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
மேலும் அத்திருத்தலத்திற்கு வருபவர்கள் கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நீங்கப்பெற்று சுபிட்சம் அடைவதாக பக்தர்களின் இடையே நம்பிக்கை உள்ளது.
இக்கோவிலில் சித்ரகுப்த சுவாமிக்கு சித்ரா பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தி திருமண வைபவம் நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் சித்ரா பௌர்ணமியான இன்று, கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி காப்பு சாத்தி மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்த சுவாமியை தரிசனம் செய்து தங்கள் வாழ்வின் பாவ புண்ணியங்களை பார்த்து எழுத வேண்டி, எள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கோவில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பக்தர்களுக்கு எவ்வித இடர்பாடுகளும் இன்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள் பிரசாங்களும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.






















