திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்ட முழுவதும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்படிருந்த அறுவடைக்கும் தயரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிவுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடிக்காக திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் நடப்பட்டது. மேலும் மேட்டூர் அணை இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதால் விவசாயிகள் மிகவும் ஆர்வமாக குருவை சாகுபடி செய்தார்கள். மேலும் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்ததாலும் குருவை சாகுபடி சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் கருதியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 2000 ஏக்கரில் நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீர் வயலில் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளது. குருவை சாகுபடிக்கு காப்பீடு இல்லை என்பதால் யாரிடம் நிவாரணம் பெற முடியும் என்ற நிலையில் விவசாயிகள் தங்கள் கவலையை தெரிவித்தனர்.
இருப்பினும் அரசு, குருவை சாகுபடி பாதிக்கப்பட்டால் பேரிடர் இழப்பீட்டு நிதி மூலம் நிவாரண வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அது அவர்களுக்கு ஓரளவு மன நிறைவை தந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் உடனடியாக வந்து பார்வையிட்டு கணக்கெடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அதில் அரசு அலுவலர்கள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசு, விவசாயிகளின் சூழலைப் புரிந்துக் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தை உடனடியாக பார்வையிட்டு பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் விவசாயிகள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
நீரில் மூழ்கிய நெற்கதிர்களை அறுவடை செய்ய நன்றாக வயல்வெளி காய வேண்டும் அதற்கு குறைந்தபட்சம் 5 லிருந்து 10 நாட்கள் ஆகும். ஆனால் தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றார்கள்.
எனவே அரசு, போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.