திருவாரூர். மார்ச். 19 –
தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெல்லிகாவல் புதூர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தலைமையில் மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் கட்சியின் கருப்பு சிகப்பு நிறம் கொண்ட இரு வர்ண கொடியை ஏற்றி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களை திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு கருப்பு சிகப்பு கரைக் கொண்ட இருவர்ண வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் திமுக எப்போதும் தங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என உறுதியினை வழங்கினார்.























