மீஞ்சூர், மார்ச். 24 –
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார் .
இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வீட்டு உபயோகத்திற்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கு லாரிகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்நிலையில் அவ்விபத்தில் அதன் அருகே இருந்த ஒப்பந்த தொழிலாளி குருபாதத்தின் முகம் கை கால் பகுதிகளில் பலத்தகாயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும். பழமையான சோதனைக்கு உட்படுத்தப்படாத சிலிண்டர்களை பயன்படுத்துவதால் இதுப்போன்ற விபத்துக்களை அடிக்கடி அங்கு பணிப்புரியும் 150 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர் கொள்ள வேண்டிவுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் இனி இதுப்போன்ற விபத்துக்கள் ஏற்படாமலும், மேலும் அங்கு பணிப்புரியும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு தகுந்த உயிர் மற்றும் உடலை பாதுகாக்கும் உபகரணங்களை அவர்களுக்கு வழங்கிடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களையும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு தலைமையில் அத் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.






















