உடன்குடி:
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. பொருளாதார வளர்ச்சி, சிறு-குறு தொழில் பாதிப்பு, சிவகாசியில் பல லட்சம் பேர் வேலை இழப்பு என பல வழிகளில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் பின்தங்கியதற்கு காரணமான பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. இதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு உறுப்பினருக்கு 10 ஓட்டுகள் வீதம் சேகரிக்கவேண்டும். தமிழகத்தில் வாக்காளர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். அவர்களை வாக்குச் சாவடியில் சேர்ப்பது உங்கள் கடமை. ஆளும் கட்சியினரின் உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் களப்பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.