கும்பகோணம், பிப். 17 –
பிப்ரவரி 14 ஆம் தேதி குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிவசேனா கட்சி சார்பில் கோவையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஹிந்துக்களுக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் (PMT) மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் இசக்கி ராஜா தேவர் பேசியதாக கூறப்படுகிறது.
அப்பேச்சினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்ப்பட்டதாக காவல்துறையினர் சார்பில் கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக இசக்கி ராஜாவின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இசக்கி ராஜா தேவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும், மேலும் அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேலும், தொடர்ந்து ஹிந்து சமூக மக்கள் மீது போடப்படும் பொய் வழக்கை தமிழக அரசும் காவல்துறையும் நிறுத்திக் கொள்ள வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு சிவசேனா கட்சி, முத்துராமலிங்கத் தேவர் (PMT) மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிவசேனா கட்சி மாநில செயல் தலைவர் சசிகுமார் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் விவசாய சங்க தலைவர் அருண் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி பாஜக மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன் கணபதி தேவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.























