கும்பகோணம் அருகே வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம் கார்டுகள் பறி முதல் செய்துள்ளனர்.
கும்பகோணம், செப். 29 –
கடந்த சில நாட்களாக கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை, சோழபுரம், திருவிடைமருதூர் பாபநாசம் போன்ற பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் முதியவர்கள் மற்றும் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு பணம் எடுத்து கொடுத்து உதவுவது போல் நடித்து பண மோசடியில் சில நபர்கள் ஈடுப்பட்டு வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளி பிரியாக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
அப் புகாரின் பேரில் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் காமராஜ் காவலர்கள் தேவேந்திரன், கவியரசன், விக்னேஷ் ஆகியோர் ஆடுதுறை பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களை இன்று கைது செய்தனர்
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த சிவநாதன், மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. இந்தப் பணம் பல்வேறு நபர்களிடம் ஏமாற்றிய பணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் சோழபுரம் பகுதியில் 52 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டது. அந்த கண்காணிப்பு கேமராக்களில் இந்த மோசடி நபர்கள் கைவரிசை காட்டியது பதிவாகியிருந்தது. அதனடிப் படையில் தனிப்படை காவல் துறையினர் இவர்கள் மூவரையும் கைது செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.