கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்து தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார்.
கார்த்திக் நேற்றிரவு தங்கரகாளி பகுதியில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தாரியாஜாரி என்ற இடத்தில் சென்றபோது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அவரை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கியது. பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய கார்த்திக், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடினர். ஆனால் அவர்கள் தப்பித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் நேற்று மாலை குல்தாலி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர் சூரத் அலி மோண்டலை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.