மதுரை:

தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன ஆனது? ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை சமர்பிக்கவில்லை ? என கேள்வி எழுப்பினர்.

தமிழர் நாகரீகம், பண்பாட்டை அறிவது முக்கியம். ஆனால் இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல. கீழடி அகழ் வாய்விலும் அதிகாரி இடம் மாற்றம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளால்தான் மத்திய தொல்லியல் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் விரைவாக குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை பிப்ரவரி 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here