ஆர்.கே.பேட்டை, டிச. 9 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு அன்றாட தேவைகள் மற்றும் வேலை வாய்ப்பு, உயர்நிலை கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக அக்கிராமத்தில் இருந்து அருகில் உள்ள பல கிலோ மீட்டர் தூரம் உள்ள நகரங்களை நோக்கி அன்றாடம் சென்று வரும் சூழல் உள்ளது
முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறிப்படதக்க வகையில் உள்ளது. பொதுவாக அலுவல் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பேரூந்துகளில் செல்பவர்கள் காலை 8 மணிக்குள் இங்கிருந்து சென்றால்தான் சரியான நேரத்திற்கு பணிக்கோ கல்விக் கூடங்களுக்கோ செல்ல முடியும். ஆனால் சமீப காலமாக இங்கு வந்துச் செல்லும் பேரூந்துகள் சரியான நேரத்திலும் சில சமயங்களில் வர தவறுவதுமாக இருப்பதாக அக்கிராம பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து தங்கள் வருத்தத்தையும், வலியுறுத்தலையும் பல முறை துறை சார்ந்த அலுவலர்களிடம் வாய்மொழியாக எடுத்துக் கூறியும் அதுக்குறித்து தகுந்த எந்தவித நடவடிக்கைகளை துறைச்சார்ந்த அலுவலர்கள் எடுக்க தவறிவுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனைக் கண்டிக்கும் வகையில் இன்று அம்மையார் குப்பம் பேரூந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே கல்லூரிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் வெகு நேரமாக பேரூந்து வராததால் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த காவலதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுக் குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறிய உறுதியை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்துச் சென்றனர்.
இந்த திடீர் மறியலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது மேலும் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.