மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைப்பெற்றது. அப்போது திடீரென சட்டத்தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டதால் உடனடியாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு நான்கு மணி நேரத்திற்கு பிறகு புதிதாக சிறிய தேர் அமைக்கப்பட்டு தொடர்ந்து அவ்விழா நடைப்பெற்றது.
மேலும் ஒவ்வொரு பக்தர்களின் வீடுகள் தோறும் தேர் நிறுத்தப்பட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை எடுத்து வழிபாடுகள் செய்தனர். மேலும் அத்திருக்கோயிலுக்கு புதிதாக தேர் செய்து தர வலியுறுத்தி தமிழக அரசுக்கு அப்பகுதி வாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ம் தேதி பூச்சொறிதல் வைபவத்துடன் தொடங்கி 28-ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு நேற்று தீமிதி உற்சவம் நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடத்தப்பட்டது. சட்டங்களால் கோர்க்கப்பட்டு செய்யப்படும் தேர் சிதிலமடைந்து பழுதடைந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
ஊர் பொதுமக்களால் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு சட்டங்களால் இணைக்கப்பட்ட தேரோட்டம் இன்று மீண்டும் நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீமத் மகா மாரியம்மன் எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது.
கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதி வி.வெங்கடேச பெருமாள், தில்லையாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ரெங்கராஜ், விழாக்குழுவினர் தேரை வடம் பிடித்து துவங்கி வைத்தனர். சார்ந்தாரை காத்த சுவாமி கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி தேரோட்டம் நடைபெற்ற நிலையில், கீழ வீதியிலிருந்து புறப்பட்ட தேர், தெற்கு வீதியில் வலம் வந்து, மேல வீதி சந்திப்பில் திரும்பிய போது தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டது.
இதையடுத்து தேர் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சுவாமி வீதியுலா செல்லும் வாகனத்தில் சிறிய தேர் அமைக்கப்பட்டு சுவாமியை எழுந்தருளச் செய்து தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்று நிலையை சென்றடைந்தது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் முனயற்சியால் தேரோட்டம் நடத்தப்பட்ட நிலையில் தேரின் முன்சக்கரம் உடைந்ததாகவும் உடனடியாக சிறிய தேர் அமைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றதாக தெரிவித்த ஊர் பொதுமக்கள் தங்கள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதிதாக தேர்வு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.























