திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்த வழக்கில் ஆடிட்டர் ஒருவர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்பு வெளியே வந்துள்ளார். அப்போது அக்காவல் நிலைய வாசலிலேயே, அவர் மீது புகாரளித்த பெண்ணின் சகோதரன் தலையில் தாக்கியதில் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பெண்ணின் சகோதரனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் (46). காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் அதேப் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் லாவண்யா (26) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் தீவிர முயற்சி மேற் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் லாவண்யாவை ஆடிட்டர் ராபர்ட் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
அதுக்குறித்து லாவண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட் மீது புகார் அளித்துள்ளார். அப்புகார் மீதான விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜரான ஆடிட்டர் ராபர்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவலர்களின் விசாரணைக்குப் பின்பு ராபர்ட் வெளியே வந்துள்ளார்.
அப்போது அவரை காவல் நிலைய வாசல் முன்பாகவே லாவண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலையில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார். அதில் ராபர்ட் சுருண்டு விழுந்து தாக்குதல் நடைப்பெற்ற சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து லாவண்யாவின் தம்பி மௌலி (23) என்பவரை திருவள்ளூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






















