ஒரத்தநாடு, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …
ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம். எனவும் அதனால் வேட்பாளர்கள் யாரும் எங்கள் பகுதிக்கு வாக்குக் கேட்டு வர வேண்டாம் என, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காடு, வள்ளுவர்குடி, நத்தம் கிராமமக்கள் அறிவிப்பு செய்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், தெலுங்கன்குடிக்காடு வள்ளுவர்குடி நத்தம் கிராமம், உள்ளிட்ட கிராமங்களில் மொத்தம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரத்தநாட்டில் இருந்து வள்ளுவர்குடி நத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலை போடப்பட்ட நிலையில், தற்போது அந்த சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும், அதேபோல் மயானக் கரைக்கு செல்ல முறையான சாலை இல்லாததால் இறந்தவர்கள் உடல்களை கைகளில் சுமந்து செல்லும் அவல நிலை இருப்பதாகவும், மேலும் குடிநீர், அங்காடி, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் முறையாக இல்லை என தெரிவிக்கும் அப்பகுதிமக்கள் அப்பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அக்கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க போவதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அதனை செயல் படுத்தும் வகையில் அக்கிராம நுழைவு வாயில் சுவர்களில் சுவரொட்டி மூலம் வேட்பாளர்கள் யாரும் வாக்கு கேட்க உள்ளே வராதீர்கள் என்றவாறு அறிவித்துள்ளனர். அதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதில் முக்கிய சாரம்சம் என்னவெனில் தெலுங்கன்குடிக்காடு வள்ளுவர்குடி நத்தம் கிராமம் என்பது முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சொந்த ஊர் என்பதாகும்.






















