மீஞ்சூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் திருவிழா விழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கு ஒவ்வொரு நாட்களும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து ஏழாம் நாளான 21 ஆம் தேதியான இன்று பங்குனி உத்திரத் திருத் தேரோட்டம் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவில் மீஞ்சூர் கிராமத்தினர் முன்னிலையில் வி.ஆர். பகவான் வடம் பிடிக்க காலை 8.50 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது. தேரானது தேரடி தெரு, ஐயப்பன் கோவில் வீதி, விஆர் பகவான் தெரு, மண்டபம் வீதி வழியாக வந்து சுமார் 12.30 மணியளவில் கோவில் அடியை வந்து சேர்ந்தது.
அதில் சுப்பிரமணி டாக்டர். விஜயராவ், ருக்மணி மோகன்ராஜ், அலெக்சாண்டர், நாலுர் முத்துக்குமார், தன்ராஜ், மாரி, தமிழரசன், உள்ளிட்டவர்களும், மேலும் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.





















