கும்பகோணம், பிப். 26 –
கும்பகோணம் அருகே திருபுவனத்தில், பாரம்பரியமிக்க, கலைநயமிக்க, 20 ஆண்டுகளுக்கு முந்தய கைத்தறி பட்டு சேலைகள் கண்காட்சி ! 600 பெண்களின், 750 கைத்தறி பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இக்கண்காட்சியில் சிறந்த பட்டுசேலைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலை வழங்கப்படுகிறது மேலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து பட்டுச் சேலைகளுக்கும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இது போன்ற பாரம்பரிய பட்டுசேலை கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்திட இதனை பார்வையிட்டு வியந்த பெண்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
அகில இந்திய அளவில், கைத்தறி பட்டுச்சேலை விற்பனையில் முதன்மை நிறுவனமாக திகழும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் திகோ சிலக்ஸ் (எ) திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், மாசி மாத பட்டுத்திருவிழா பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 14ம் மாதம் வரை நடைபெறுகிறது, புவிசார் குறியீடு ஜீஐ பெற்ற திகோ சிலக்ஸ், மாசி பட்டுத்திருவிழாவின் ஓர் அங்கமாக இன்று ஒருநாள், 20 ஆண்டுகளுக்கு முந்தய பாரம்பரிய கைத்தறி பட்டுச்சேலைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்நிறுவனத்தில் முழுவதும் கைத்தறி பட்டு நெசவாளர்களால் தயார் செய்யப்பட்ட பாரம்பரியமிக்க கடந்த 1962ம் ஆண்டு முதல் 2001 ஆண்டு வரை முழுவதும் கைத்தறியில் தயார் செய்யப்பட்ட 750 பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக இதில், சீதாக்கல்யாணம், தஞ்சை கோயிலில் உள்ள நடன சிற்பம், பட்டீஸ்வரம் கோயிலில் காணப்படும் சிற்பம் அதே வண்ணத்தில் நேர்த்தியாக நெய்யப்பட்ட பட்டுச்சேலை, மாமன்னன் இராஜராஜ சோழனும், கரூவூரார் உருவத்துடன் கூடிய பட்டுச்சேலை, சிரித்த முகத்துடன் கூடிய ஆலிலை கண்ணன், தாயும் சேயும், குறிப்பிட்ட சமூகத்தினர் திருமணத்திற்கு பயன்படுத்தும் வனசிங்காரம் வகை பட்டுச்சேலை,
ஒரே சேலையில் திருக்கோயில் பள்ளிவாசல், தேவாலயம், ரயில், விமானம், கார் ஆகியவற்றை நேர்த்தியாக நெய்த பட்டுச்சேலை உள்ளிட்ட பல கலைநயத்துடன் கூடிய பாரம்பரிய பட்டுச்சேலைகள் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன, இவற்றை 600 பெண்கள் இக் கண்காட்சிக்கு காட்சிப் படுத்த வழங்கியுள்ளனர்.
இவர்களின் சேலை ஒவ்வொன்றுக்கும் தலா ரூபாய் 200 பராமரிப்பு செலவீனமாக வழங்குவதுடன், கண்காட்சியில் பங்கேற்றமைக்காண நற்சான்றிதழும் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியை பார்வையிடுவோர், அதில் உள்ள சேலைகள் பிடித்து இருந்து அவற்றை போன்ற சேலைகள் வாங்க விரும்பினால், அதே போன்று, புதிய பட்டுசேலை கைத்தறியில் திகோ சிலக்ஸ் நெசாவாளர்களை கொண்டு நெய்து தரவும் இந்நிறுவனம் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கூடுதலாக, இந்த கண்காட்சியில், உள்ள பட்டுச்சேலைகளில் இருந்து சிறந்த 3 பட்டுச்சேலைகள் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலையும், 2ம் பரிசாக ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலையும், 3ம் பரிசாக ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலையும் பரிசாக வழங்கப்படுகிறது. இது போன்ற பாரம்பரிய பட்டுச்சேலைகள் கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என இக்கண்காட்சியை பார்வையிட்ட பெண்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.




















