புதுச்சேரி, மார்ச்.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை பில்லுக்கடை சந்திப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உதியன் சாலை போலீசார் சென்றனர், அப்போது போலீஸாரை கண்டவுடன் கஞ்ச விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தரவே காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜிஜோ பிரசாத் என்பதும் அவர் பல்வேறு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் பிற போதை பொருட்கள் என 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 20.400 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் சிறிய அளவிலான பிறபோதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்ததாகவும் அதை புதுச்சேரியில் சிலர் உதவியுடன் விற்பனை செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


















