திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை ஆகும். மேலும் நாடு முழுவதும் மத்திய நிதியுதவியுடன் செயல்படும் உயர்கல்வி நிறுவன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ரூ. 12,744.39 கோடி மதிப்பில் பிரதமர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்பணித்தார்.
அதன் பகுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கைலாஷ் சத்யார்த்தி கல்விக் கட்டடம், கோதாவரி பெண்கள் விடுதி (300- படுக்கைகள்), மகாநதி ஆண்கள் விடுதி (300-படுக்கைகள்) ஆகிய அதிநவீன உள்கட்டமைப்புகளைக் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் நாடு முழுவதும் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், கல்வி மற்றும் உறைவிட வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததை இவ் விழா உறுதி செய்துள்ளது.
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன், பதிவாளர் பேராசிரியர் முருகன், நிதி அலுவலர் கிரிதரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் முனைவர் ஆர்.பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
ரூ.95.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று கட்டங்களும் உயர்கல்வி நிதியளிப்பு முகமையின் (HEFA) நிதியுதவியுடன் மத்தியப் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கட்டடங்களில் மின்தூக்கி (Lift), வலைத்தள இணைப்பு (Wi-Fi) மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
ரூ. 31.94 கோடி செலவில் 7092 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கைலாஷ் சத்யார்த்தி கல்விக் கட்டடம், இசைத்துறை, புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதத்துறை, தோட்டக்கலைத்துறை, தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத் துறை, நுண்ணுயிரியல் துறை, உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய ஆறு துறைகளை உள்ளடக்கியது.
கோதாவரி பெண்கள் விடுதி 300 படுக்கைகளுடன் 8117 சதுர மீட்டர், ரூ. 31.63 கோடி செலவிலும், மகாநதி ஆண்கள் விடுதி 300 படுக்கைகளுடன் 8117 சதுர மீட்டர், 31.63 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த நவீன வசதிகள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றன. மேலும் இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள் என திரளானவர்கள் பங்கேற்று விழாவினை மேலும் சிறப்பித்தனர்.