திருவாரூர், ஆக. 01 –
குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது..
அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை 100% மானியத்தில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும், திருவாரூர் மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பிற்காக ரூ. 19.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குறுவை தொகுப்பு விவசாயிகளுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட சில இடங்களில் விவசாயிகளிடம் ‘அசோஸ்பைரில்லம்’ எனும் திரவ உயிர் உரங்களை 300 ரூபாய் கொடுத்து FC வாங்கினால் தான் குறுவை தொகுப்பு கிடைக்கும் என்றும்.. பல இடங்களில்.. ‘குறுவை தொகுப்பு குறைவாக வந்துள்ளது எனவே பாதி பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் நல சங்க செயலாளர் ராமமூர்த்தி தெரிவிக்கும் போது,
“குறுவை தொகுப்பிற்கு போதுமான அளவு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும், குறுவை சாகுபடி செய்தவர்களில் 50 சதவீத விவசாயிகள் மட்டுமே குறுவை தொகுப்பு பெற்றுள்ளார்கள் எனவும், இத்தொகுப்பு அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி: ராமமூர்த்தி, செயலாளர். (தமிழக விவசாயிகள் நல சங்கம்)



















