மீஞ்சூர், ஜூலை. 04 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாசக்கால், ஜன்னல், கதவுகள், மற்றும் மரத்திலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் மரக்கடை அப்பகுதியில் உள்ளது. மேலும் இம்மரக்கடையில் பல கோடி மதிப்பிலான மரச்சாமன்கள் மற்றும் மரங்கள் விற்பனைக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அம்மரக்கடையில் தீப்பற்றி எரிந்து பலகோடி மதிப்பிலான மரத்தால் செய்யப்பட்டப் பொருட்கள் மற்றும் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
மீஞ்சூர் பகுதியைச் சார்ந்தவரான தேவ்பட்டேல் (60) என்பவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை சண்முக குமுதவல்லி திருமண மண்டபத்திற்கு எதிரில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பிற்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் அவர் அதேப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் மிகப்பெரிய அளவிலான மரக்கடையினை அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுக் காலை 8 மணி அளவில் மரக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறின அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,விரைந்து வந்தவர் கடையை திறந்து பார்த்த போது மர சாமான்கள் எல்லாம் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டவர் மிகுந்த அதிர்ச்சியில் உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கும் புகார் தெரிவித்தார்,
தகவலறிந்து அச்சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர். அத்தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் அத்தீயினை வெகு நேரமாகப் போராடினார்கள். இந்நிலையில் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி மள மளவென அக்கடை முழுவதும் பரவி மிகப்பெரிய தீ பிளம்பை எழுப்பி எரியத் தொடங்கியது.
இந்நிலையில் அத்தீயினை அணைக்க தண்ணீர் பற்றாக்குறையால் மேலும் அப்பணியில் தீயணைப்பு துறையினருக்கு தொய்வு நாலை ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் எடுத்த தொடர் நடவடிக்கையால் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து டிராக்டர் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கட்டுக்கடங்காத அத்தீயினை அணைக்க மேலும், எண்ணூர், அத்திப்பட்டு, மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு துறையினரை வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இடைவிடாது தீயணைப்புத்துறையினரின் சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்கு பின்பு, தீயை அணைத்தனர், மேலும் இத் தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கிறது எனவும், இதனால் சுமார் ரூபாய் இரண்டு கோடிக்கும் மேலான பொருட்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் இத் தீ விபத்துக்கான காரணமும், பொருள் பாதிப்புக் குறித்த தகவல்களும் மீஞ்சூர் காவல்நிலைய காவலர்களின் முழுமையான விசாரணைக்கு பின்பே தெரிய வரும்.
இவ்விபத்துக் குறித்து தகவலறிந்து அங்கு வந்த, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்ஸாண்டர், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், வல்லூர் தமிழரசன், உள்ளிட்டவர்கள் விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.
























