காஞ்சிபுரம், செப். 05 –
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலைய அமைவிடம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியிலிருந்து காரில் நேற்று வந்து கொண்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமப் பகுதியில் திடீரென அவரது காரை டி.எஸ்.பி.ஜூலியஸ் சீசர் தலைமையிலான காவல்துறையினர் வழிமறித்து அவரைக் கைது செய்துள்ளனர். பி.ஆர்.பாண்டியனுடன் அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் துரைச்சாமி, சென்னை மண்டல செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு 3 பேரும் காஞ்சிபுரம் அருகேயுள்ள மாகரல் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்ற நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.