திருவாரூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, அதன் அருகில் இருந்த இரண்டு கீற்று கொட்டகைகளுக்கும் தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த மூலங்குடி மெயின்ரோட்டில் செல்வகுமார் என்பவது மனைவி பூங்கொடி தனது குடிசை வீட்டில் உணவகம் நடத்தி வருகிறார்.
சம்பவ நாளன்று உணவகத்தில் அவர் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரித்து கொண்டிருந்த போது அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.. அப்போது அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் உணவகம் முற்றிலுமாக தீயில் எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத் தீ விபத்தின் போது எதிரே இருந்த அன்பழகன் மாடி வீட்டின் முன்பக்கம் இருந்த கீற்றுகொட்டகை அதேபோன்று உணவகத்தின் அருகில் இருந்த மாடிவீட்டின் மேற்புறம் இருந்த கீற்றுகொட்டகை என இரு இடங்களில் உள்ள கீற்றுக்கொட்டைகைகள் மீது தீ பொறி விழுந்ததில் அவைகள் முழுவதுமாக எரிந்து சேதமானது.
மேலும் அத் தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடவாசல் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் அத் தீ விபத்துக் குறித்து குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















