தஞ்சாவூர், ஆக. 27 –

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில், மாவட்ட அளவிலான வேளாண் சிறப்பு பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்நிலையங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை நடைப்பெறுகிறதா, உரம் பதுக்கல், கடத்தல், மற்றும் விவசாயத்துக்கான யூரியா பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை  தடுத்திடும் வகையில் இச்சோதனைகள் நடைப்பெற்றதாக சிறப்பு படைக்குழுவினர் தெரிவித்தனர்.

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தேவைக்காக பத்து தனியார் உரக்கடைகளுக்கும் பத்து கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கும் உர விற்பனை உரிமம் வழங்கப்பட்டு அந்நிலையங்களுக்கு தேவையான அளவு உரம் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது, சம்பா சாகுபடி முழு வீச்சில் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான யூரியா வாங்கும் போது அவர்களிடம் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பது மற்றும் பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல் என்பது போன்ற புகார்களை விவசாயிகள் மாவட்ட அளவில் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில்,

அப்புகார்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேளாண்மை இயக்குனரின் உத்தரவுக்கிணங்கவும், வேளாண் இணை இயக்குனரின் அறிவுறுத்தல் படியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அக்குழுவினர் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கையை அனுப்பிட வேளாண் இணை இயக்குனர் அச்சிறப்பு பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அனைத்து விற்பனை நிலையங்களிலும் உர விற்பனையில் மீறுதல்கள் இருக்கின்றனவா என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தேவைக்கு உரங்கள் வைக்கப்பட்டுள்ளதா அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா உர கடத்தல் பதுக்கல் மற்றும் விவசாயத்திற்கான யூரியா உரம் பிற தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றனவா போன்ற உரக்க்கட்டுப்பாட்டு ஆணை 1985 க்கு புறம்பான செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பது குறித்தும் முழுமையான ஆய்வினை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது விற்பனை முனைய கருவி பழுதான நிலையில் உர விற்பனை மேற்கொண்ட இரண்டு கூட்டுறவு உர விற்பனை நிலையம் மற்றும் ஒரு தனியார் விற்பனை நிலையத்தின் மீது எச்சரிக்கை தபாலினை வழங்கினார்கள்.

மேலும் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உர மூட்டைகளின் எடை சரியாக உள்ளதா என்பது குறித்தும் அப்போது அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும், காலாவதியான உரங்கள் மற்றும் உர மூட்டைகள் தற்போதைய உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதுக் குறித்தும் ஆய்வு நடத்தினார்கள். மேற்கண்ட ஆய்வின் போது துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி  அட்மா திட்ட அலுவலர் ராஜு ஆகியோர் உடன் அவர்களுடன் ஆய்வில் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here