கும்பகோணம், ஏப். 14 –

தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை, இத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும்.

இந்நிலையில் இன்று “சுபகிருது” தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு விசேஷ திருப்படி பூஜை நடைபெற்றது. அறுபது படிகளிலும் பக்தர்கள் திருவிளக்கேற்ற சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம், மேலும் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத பிரஜோத்பத்தி என தொடங்கி குரோதன, அட்சய என முடிவுறும் 60 தமிழ் வருட படிக்கட்டுகளுக்கும் விசேஷ திருப்படிப்பூஜை செய்வது வழக்கம், அதுபோல இன்று 60 தமிழ் வருட வரிசையில் 36வது தமிழ் வருடமான “சுபகிருது” வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், கும்குமம் இட்டு ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வெற்றிலை, தேங்காய், பூ, பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சமுக கற்பூரதீபம் காட்டி மகா தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும் இன்று சுபகிருது தமிழ் வருடப்பிறப்பை யொட்டி மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது தங்ககவசம், வைரவேலுடன் இராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here