இராசிபுரம், ஆக, 23 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமம் இந்திரா நகர் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் பல லட்சங்கள் செலவு செய்து அப்பகுதியில் வசிக்கும் சாரதா என்பவர் வீட்டின் அருகே ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு, அடிபம்பு போடப்பட்டது.
அப்பம்பினை ஊராட்சி நிர்வாகம் சரியான கவனம் செலுத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், கடந்த சில ஆண்டுகளாக அப்பம்பு செயல்பாட்டில் இல்லாது போனது. இதனை பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்து தராததால், அந்த பகுதியில் தற்போது வரையிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிபம்பு அருகே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அதில் லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றின் அடி பம்பை சரி செய்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், அந்த அடிபம்பு மூழ்கும் அளவிற்கு காங்கிரீட் கொண்டு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் ஊடகங்களிலும் சோசியல் மீடியா மற்றும் பிரிண்ட் மீடியாக்கள் மூலம் அக்கட்சி வெளிவந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகநாதன் மற்றும் துறைச்சார்ந்த உயர் அலுவலர்கள் சம்பவ இடத்தை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அடி பம்போடு சேர்த்து போடப்பட்ட கான்கீரிட்டை அகற்றி லட்சக்கணக்கில் செலவு செய்து போடப்பட்ட அடிப்பம்பையும் அகற்றிவுள்ளனர். மேலும், அந்த அடிப்பம்பு மீண்டும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வருமா என்பது கேள்ளவிக்குறியாகி உள்ளது.
மேலும் இதுப்போன்று தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் பணி ஒப்பந்ததாரர்களின் அலட்சியப் போக்கு மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் களத்திற்கு சென்று களஆய்வு மேற்கொள்ளாமை மற்றும் இப்பணிகள் நடைப்பெறும் போது பொதுவாக பல்வேறு துறைகளின் கூட்டு முயற்ச்சியோடு நடைப் பெறுவது வழக்கம் ஆனால் அந்நிலை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்விகளை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். இதனால் இதுப்போன்ற நிகழ்வுகளும் அதனால் அரசுப் பணம் வீணடிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன் கூறுகையில், கான்கிரீட்டில் தவறுதலாக போடப்பட்ட அடிபம்பு உடனடியாக அகற்றப்பட்டது. மேலும் இந்தப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவருக்கு ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வரும் காலங்களில் எந்த ஒப்பந்தமும் தரக்கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.